ஈரோடு மாநகராட்சியில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்ததாவது: மாநகராட்சியில் இரு புது பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது சோலார் பகுதியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், சத்தி சாலையில், 14.55 ஏக்கர் பரப்பளவில், 80 கோடி ரூபாய் செலவில், புது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான கருத்துரு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, நடப்பாண்டில் கூடுதல் வகுப்பறை மற்றும் பராமரிப்பு செலவுக்கு, 8.68 கோடி ரூபாய்க்கு மானியம் வழங்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர், கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு, நடப்பு நிதியாண்டில் இருந்து தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
மாநகராட்சி பகுதியில் கழிவு நீரை சுமந்து ஓடும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை, 100 கோடி செலவில் சீரமைத்து இருபுறங்களிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதேபோல் மாநகராட்சி பகுதிகளில், 10 கோடி ரூபாய் செலவில் வடிகால் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.