கோவை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு கல்லுாரிகளில் நுாலகர் மற்றும் விளையாட்டு இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் தமிழக அரசு தரப்பில் புதிய கல்லுாரிகள் துவக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மொழி மற்றும் கலை பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, பின் படிப்படியாக அறிவியல் பாடப்பிரிவுகள் துவக்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில், 90 என்ற அளவில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் இருந்தன; தற்போது, 163 கல்லுாரிகளாக அதிகரித்துள்ளன. கடந்த, ஒன்றரை ஆண்டில் மட்டும், 13 கல்லுாரிகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன.
மூன்றாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கல்லுாரிகளிலும் இதுவரை நுாலகர், விளையாட்டு இயக்குனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. பள்ளிகள் அளவில் விளையாட்டு துறையில் சாதித்து வரும் மாணவர்கள் இதுபோன்ற கல்லுாரிகளில் போதிய வழிகாட்டுதல் இன்றி, வாய்ப்புகளை இழக்கும் சூழல் தொடர்கிறது.
மொத்தமுள்ள, 163 கல்லுாரிகளில், 60 கல்லுாரிகளில் நுாலகர், விளையாட்டு இயக்குனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவையில் புதிதாக துவக்கப்பட்ட அரசு கல்லுாரியின் பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,'மாணவர்கள் விளையாட்டு பிரிவில் மாவட்ட அளவில் சாதித்து சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் இல்லை.
விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள் பாதிக்காத வகையில், அருகில் உள்ள கல்லுாரி விளையாட்டு இயக்குனர்களின் வழிகாட்டுதல்களாவது, கிடைக்கும் வகையில் ஆரம்பம் முதலே செயல்பாடுகள் வகுக்கவேண்டும். அருகிலுள்ள அரசு கல்லுாரி நுாலகங்களை புதிய கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும்' என்றார்.