ஈரோடு மாநகராட்சியின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் நிலவும் குளறுபடி குறித்தும், அனைத்து கட்சி கவுன்சிலர்களும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பிரச்னைகள் குறித்து, பலமுறை புகார் கொடுத்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று புலம்பினர்.15வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஹேமலதா பேசுகையில், ''எனது வார்டில் அடிப்படை பிரச்னை, குடிநீர் குழாய் பிரச்னை தொடர்பாக, 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவேன்,'' என்றார்.
''முதல்வரின் காலை உணவுத்திட்டத்தில் வழங்கப்படும் உணவில், எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுவதால், மாணவர்களுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் பேசினார்.
மாநகராட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தற்காலிக டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை, முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்தும், கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.