ஈரோடு: 'லஞ்சம் தராமல் வி.ஏ.ஓ.,க்களிடம், எவ்வித சான்றும் பெற முடியவில்லை' என்று, விவசாய சங்க நிர்வாகி வேதனை தெரிவித்தார்.
எந்த சான்று கேட்க வி.ஏ.ஓ.,வை அணுகினாலும், பணம் தராமல் பெற முடியவில்லை. இதுபற்றி எந்த விவசாயியும் புகார் தரமாட்டார்கள். அப்படி புகார் வழங்கி, விசாரணை நடந்த பின், வேறு சான்றுக்கு அதே வி.ஏ.ஓ.,விடம்தான் செல்ல வேண்டும் என பயமாக உள்ளது.கலெக்டர் கிருஷ்ணனுண்ணி: இதுபற்றி எழுத்துப்பூர்வமாக புகார் தாருங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். பொதுவாக கூறினால் நடவடிக்கை எடுக்க இயலாது. உங்களுக்கு ஏற்படும் பயத்துக்கு நாங்கள் ஏதும் செய்ய முடியாது.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி: மஞ்சளுக்கு விலை இல்லாததால், சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைகிறது. கர்நாடகாவில் அரசு நேரடியாக மஞ்சளை கொள்முதல் செய்வதுபோல, தமிழக அரசும் கொள்முதல் செய்ய வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் கூலி உயர்ந்ததால், இனி பெண் தொழிலாளிகள் வேளாண் பணிக்கு வரமாட்டார்கள்.
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் சுதந்திரராசு: ஒவ்வொரு தாலுகாவிலும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஒன்றாவது அமைத்து, ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டும். மஞ்சள், மரவள்ளி கிழங்கு ஆகியவற்றின் சாகுபடி பரப்பை உயர்த்த, அரசு சார்பில் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.