வங்கி ஊழியர் தம்பதி வீட்டில் திருட்டு
தாராபுரம்: தாராபுரம் அருகே வங்கி ஊழியர் தம்பதி வீட்டில், நகை மற்றும் பணம் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம், பூளவாடி பிரிவு, அசோக் நகரை சேர்ந்த தம்பதியர் செல்லமுத்து, 57, கவிதா, 49; இருவரும், தனியார் வங்கி ஊழியர்கள். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய், ஏழு பவுன் தங்க நகை, ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மூலனுாரில் சிறுத்தை; வனத்துறை அதிர்ச்சி
தாராபுரம்: மூலனுார் அருகே சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் பீதி அடைந்துள்ளனர்.
தாராபுரம், மூலனுாரை அடுத்த பெரமியம் அருகே, பொன்னுச்சாமி என்பவரின் தோட்டத்தில், சிறுத்தை நடமாடியதாக, காங்கேயம் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தைக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
காங்கேயம் அருகே ஊதியூர் மலையில் மூன்று வாரமாக பதுங்கியிருந்து சிறுத்தை, வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் துாவிவிட்டு வந்து விட்டதாக, மூலனுார் பகுதி மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. அதேசமயம் ஊதியூரில் இருந்து, மூலனுாருக்கு சிறுத்தை எப்படி சென்றிருக்கும்? அல்லது இது வேறு சிறுத்தையா? என்று, வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சி எழுந்துள்ளது.
மின்சாரம் தாக்கி யானை பலி; பர்கூர்மலை ஆசாமி கைது
அந்தியூர்: பர்கூர்மலை, கோவில் நத்தம் பகுதியில், அரசு புறம்போக்குநிலத்தில் நேற்று முன்தினம் இரவு, மின்சாரம் தாக்கி பெண் யானை இறந்து விட்டதாகவும், யானையை அதே இடத்தில் புதைத்து விட்டதாகவும், பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த சடையப்பன், 58; யானையின் சாவுக்கு காரணம் என தெரிந்தது.
அவரை கைது செய்து, பவானி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
தனியார் வங்கி வாட்ச்மேன் மயங்கி விழுந்து மரணம்
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 65; ஈரோடு-பெருந்துறையில் சாலையில் உள்ள தனியார் வங்கி பாதுகாவலர். இவருக்கு அதிகமாக சர்க்கரை நோய் இருந்தது. இவரது மனைவி கண்யாயா, 60; கடந்த, 30ம் தேதி வேலைக்கு சென்றவர் மாலை, 5:30 மணிக்கு மேலும் வீட்டுக்கு வரவில்லை. போனில் மனைவி அழைத்தபோது, அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி அருகே, மயங்கிய நிலையில் முத்துசாமி கிடப்பதாக தகவல் வந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.