திருச்சி:எம்.ஆர்., பாளையம் காப்பகத்தில், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, குளியல் தொட்டியில், காப்பக யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.
திருச்சி மாவட்டம், சிறுகனுார் அருகே, எம்.ஆர்.பாளையத்தில், 2019ல், தமிழக வனத்துறை சார்பில், 2 கோடி ரூபாய் செலவில், 48 ஏக்கர் பரப்பளவில், யானைகள் மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது.
பராமரிப்பு இல்லாததால், யானைகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வனத்துறை மற்றும் கால்நடைத்துறை கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, இந்த மறுவாழ்வு மைய காப்பகத்தில், மல்லாச்சி, 38, இந்து, 36, உட்பட ஒன்பது யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கோடை துவக்கத்திலேயே வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில், யானைகளுக்கான சாய் தளத்துடன் கூடிய பிரேத்யேக குளியல் தொட்டிகள் அமைத்து, யானைகள் உற்சாக குளியல் போட ஏற்பாடு செய்துள்ளனர். இதில், ஒன்பது யானைகளும், மூன்று தொட்டிகளிலும் குதுாகலத்துடன் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றன. மேலும், 'ஷவர்'களிலும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றன.
வெயில் அதிகமாக இருப்பதால், யானைகளுக்கு தர்பூசணி, வாழைப்பழம், முலாம்பழம், பசுந்தாள் என சத்தான பல வகை உணவுகள் வழங்கப்படுகின்றன.