மதுரை:முதலீட்டாளர்களிடம் வசூலித்த, 'டிபாசிட்' தொகையை திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்துக்கு, 2.83 கோடி ரூபாய் அபராதம் விதித்து, மதுரை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
'குயின் ஈமு பார்ம்ஸ் இந்தியா' நிதி நிறுவனம், ஈரோடு மாவட்டம், பெருந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது. இதன் கிளை அலுவலகம், திருநெல்வேலியில் செயல்பட்டது.
முதலீட்டாளர்களிடம் வசூலித்த டிபாசிட், 2 கோடியே, 50 லட்சத்து, 67 ஆயிரத்து, 500 ரூபாயை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக நிறுவனம் மற்றும் அதன் மேலாண் இயக்குனர் மயில்சாமி, இயக்குனர் சக்திவேல் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், 2012ல் வழக்கு பதிந்தனர்.
வழக்கை முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு டான்பிட் மதுரை நீதிமன்ற நீதிபதி ஜோதி விசாரித்து, மயில்சாமிக்கு ஏழு ஆண்டு, சக்திவேலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அவர்கள் மற்றும் நிறுவனத்திற்கு மொத்தம், 2 கோடியே, 83 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகையை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.