அவிநாசி:சென்னை மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிகளவில், கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங்சாய் உத்தரவின் பேரில் அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவிநாசி - திருப்பூர் பைபாஸ் சாலையில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சை சோதனை செய்தனர். அதில் தேனி மாவட்டம், கம்பம் அருகே உத்தமபுரம் பகுதியைச் சேர்ந்த சுருளி முத்து, 28, என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் கட்டு கட்டாக பாலிதீன் கவரில் சுற்றப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் சுருளி முத்துவை கைது செய்தனர்.