திருப்பூர்:திடீரென வீசும் சூறைக்காற்றுக்கு, வாழை மரங்கள் சாயும் நிலையில், விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொள்கின்றனர்.
அவிநாசி, பல்லடம், சிறுமுகை, சத்தியமங்கலம், அன்னுார் பகுதியில் அதிகளவிலான வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்பாராமல் வீசும் சூறைக்காற்றுக்கு, வாழை மரங்கள் சாய்வதால், விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக, குலை தள்ளிய நிலையில், அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள வாழை மரங்கள் சாய்வதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்,'வாழைக்கு காப்பீடு இருப்பினும், விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. சூறைக்காற்றுக்கு, 'பிர்கா' முழுக்க பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் சேதமடைந்தால் தான், இழப்பீடு வழங்கப்படும் என்ற விதி, நடைமுறையில் உள்ளது; மாறாக, ஒரு பிர்காவில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும், வாழை சேதமடைந்தால், அதற்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இந்த நடைமுறையால், வாழை சேதத்துக்கான இழப்பீடு பெற முடிவதில்லை. இந்த விதிமுறையை தளர்த்தி, இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.
தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில்,'வாழை மரங்களை காற்றில் இருந்து காப்பாற்ற, வாழை தோட்டத்தை சுற்றி சவுக்கு மரங்களை நடவு செய்வது, நல்லது. 14 மாத பயிரான வாழை, 7 மாதம் கடந்துவிட்டாலே, குலை தள்ள துவங்கிவிடும்; சூறைக்காற்றுக்கு, அத்தகைய மரங்கள் தான் அதிகம் சாய்கின்றன.
பெரும்பாலும், விவசாயிகள் வாழையை 'பெல்ட்' மூலம் கட்டி, காற்றுக்கு சாயாத வகையிலான ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பர்; சில இடங்களில் அதையும் தாண்டி, வாழை மரங்கள் சாய்ந்து விடுகின்றன' என்றனர்.
மதிப்பு கூடியும் 'மதிப்பு' இல்லை!வாழை மூலம், பெரும்பாலும், 'சிப்ஸ்' மட்டுமே மதிப்புக்கூட்டு பொருளாக தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகிறது. கிலோ வாழையை, 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்தாலும் சரி, 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்தாலும் சரி, ஒரு கிலோ 'சிப்ஸ்', கிலோ, 320 முதல், 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
எனவே, வாழை சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படும் இடங்களில், அவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தினால், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற முடியும் என்ற யோசனையையும் சிலர் முன்வைக்கின்றனர்.