கூடலுார்;பிரதமர் நரேந்திர மோடி, பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், ஹெலிபேட் அமைக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆஸ்கார் விருது வென்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைப் பாகன் பொம்மன், அவர் மனைவி பெல்லியை, பிரதமர் மோடி, வரும் 9ம் தேதி முதுமலைக்கு நேரில் வந்து பாராட்ட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து முதுமலையில் ஆயத்தப் பணிகள் நடக்கின்றன.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர், மேல்கம்மநல்லி பகுதியில், மைசூரிலிருந்து பிரதமர் வரும் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக, 'ஹெலிபேட்' அமைக்கும் பணி நடக்கிறது.
தமிழக- கர்நாடக எல்லையான முதுமலை கக்கநல்லா பகுதிகளை கர்நாடக தெற்கு மண்டல ஐ.ஜி., மதுகர்பவார், சாம்ராஜ் நகர் எஸ்.பி., பத்மினிஷாஹு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதுமலை மசினகுடி சிங்கார சாலையில், 'ஹெலிபேட்' அமைப்பதற்காக தனியார் இடத்தை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
வருவாய்த்துறையினர் கூறுகையில், 'பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகளை செய்து வருகிறோம்' என்றனர்.