இந்திய தொழில் கூட்டமைப்பின் யங் இந்தியன் பிரிவில் பெண் பிரதிநிதிகள் மதுரையின் தொழில்முனைவோர்களாக கோேலாச்சுகின்றனர். 'கூண்டுக்கிளிகளாக அடைந்து கிடந்தோம்; தொழில் செய்வதன் மூலம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்' என்கின்றனர் ஷர்மிளாதேவி, திவ்யா, பிரேமலதா, மதுமிதா.
'நால்வரும் வெவ்வேறு துறையின் கீழ் செயல்படுபவர்கள். ஆனால் யங் இந்தியன் அமைப்பின் மூலம் ஒருங்கிணைந்து அசத்துகிறோம்' என்று ஆரம்பித்தார் ஸ்டார்ட் அப் இந்தியா வழிகாட்டி ஷர்மிளாதேவி.
'யங் இந்தியன் அமைப்பில் 15 பெண் தொழில்முனைவோர் இருப்பது சந்தோஷம். பயிற்சி அளிப்பது, வழிகாட்டுவது என் பணி. இங்கிலாந்தில் 'நியூரோ லிங்கஸ்டிக்ஸ்' படிப்பில் 6 கிரேடு முடித்து மாஸ்டராக உள்ளேன். இது மனவளக்கலை பயிற்சி மாதிரி. எண்ணம், சொல், செயல், நடத்தைகளில் மாற்றம் கொண்டு வந்து தலைமைப்பண்பை வெளிக்கொணர்கிறேன்.
திருமணமாக போகும் இளம் தம்பதியர் இந்த பயிற்சி மூலம் நிறை குறையை புரிந்து வாழத் தயாராகின்றனர். எதிர்பார்ப்பு, சண்டைகள் குறைந்து மனம் ஒருமித்து வாழ்கின்றனர். மதுரையில் இந்த பயிற்சிக்கு வரவேற்பு உள்ளது. பாரம்பரிய தொழில் குடும்பத்தில் பிறந்தாலும் 'எனக்கென... எனக்கெனவே...' தொழில் செய்வது திருப்தி' என்றார் ஷர்மிளா தேவி.
'பி.இ., படித்து திருமணத்திற்கு பின் 12 ஆண்டுகள் அபுதாபியில் வாழ்ந்தபின் மதுரை வந்தோம்' என்கிறார் திவ்யா. கணவர் லோகேஷ் சிவில் இன்ஜினியர், அபார்ட்மென்ட் வீடுகளை கட்டி வருகிறார். 'எல்லாவற்றுக்கும் கணவரை முன்னிறுத்தியே வந்த எனக்கு தனி அடையாளம் இல்லை என உணர்ந்தேன். கணவரின் நிறுவனத்தில் வேலைகளை பழகினேன். ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெறுவது முதல் சிவில் பணிகளை நிர்வகிப்பது வரை தனியாக செய்கிறேன். செங்கல் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளேன். எனக்கான அடையாளத்தை உணர்ந்து இருக்கிறேன்' என்றார்.
ராஜபாளையத்தை சேர்ந்த மதுமிதா, சென்னையில் பி.காம்., படிப்போடு விளையாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். கணவர் தர்மேஷ் பல் டாக்டர். 'திருமணம் முடிந்து குழந்தை என்று பிசியாகி விட்டேன். 'ஆஹா… என்னை காணவில்லையே நேற்றோடு' என மனம் கெஞ்ச தொடங்கிய போது, பிறந்தநாள், பிற விழாக்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம் தொடங்கினேன்.
தற்போது கேக் தயாரிக்க ஆரம்பித்துள்ளேன். கேக் தயாரிப்பதோடு, கேக் தயாரிப்பிற்கான ரெடிமிக்ஸ் தயாரித்து விற்கிறேன். செயற்கை பொருட்கள் சேர்க்காமல் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஆர்டர்கள் கிடைக்கின்றன. காட்டன் பேக், டிஸ்யூ பேப்பர் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளேன். சுயமாக நிற்கும் சுகம் வேறெதிலும் இல்லை என உணர்கிறேன்' என்றார்.
நிறைவாக நம்மிடம் பேசியவர் பிரேமலதா. நடுத்தர குடும்பத்து நாயகி அமெரிக்கா சென்று மதுரையில் செட்டிலான கதையை விவரித்தார். 'எம்.இ., முடிக்கும் போதே சொந்தமாக ஓட்டல் தொடங்க தீர்மானித்தேன். விதி வேறுவிதமாக விளையாடியது. அமெரிக்காவில் கணவர் சவுந்தரராஜனுடன் செட்டிலானேன். அங்கே வலைதமிழ் ரேடியா ஜாக்கியாக பணிபுரிந்தேன். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது வாஷிங்டனில் இருந்து தொகுத்து கொடுத்தது நான் தான். 2 குழந்தைகள் பிறந்தபோது அமெரிக்க வீட்டை விற்று மதுரை வந்தோம். மீண்டும் ஓட்டல் கனவு வந்தது. 'நம்ம கபே' பிரான்சைஸ் எடுத்தோம். எனக்கென அடையாளம் வேண்டுமல்லவா... மதுரை ஐயர்பங்களாவில் 'மெட்ராஸ் கல்யாண பிரியாணி' ஓட்டல் தொடங்கினேன். நல்ல வரவேற்பு உள்ளது. 'ேஹப்பி... இன்று முதல் ேஹப்பி' என வலம் வருகிறேன்' என்றார்.
நால்வரும் நம்மிடம் விடைபெறும் போது, 'பெண்கள் சுயமாக முன்னேறும் போது உலக விஷயங்களை ஆண்களுக்கு இணையாக கற்றுக் கொள்ள முடியும். அதன் மூலம் தைரியம், தன்னம்பிக்கை கிடைக்கும். நாம ஜெயிச்சுட்டோம் லேடீஸ் என்று கெத்தாக சொல்கிறோம்' என்றனர்.