மதுரை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான தகுதிச் சான்று வழங்க மாவட்டந்தோறும் மருத்துவ வாரியம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஒரு தம்பதி வாடகைத் தாய் மூலம் கருத்தரிப்பு மையத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதிச் சான்று வழங்க திருநெல்வேலி மாவட்ட மருத்துவ வாரியத்திடம் மனு அளித்தனர். இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டப்படி சான்று வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: பாரம்பரிய திருமணத்தின் பொருள் இனப்பெருக்கம். உயிரியல் காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு நவீன விஞ்ஞானம் உதவுகிறது. இது உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் பேச்சுவழக்கில் செயற்கை கருத்தரிப்பு (ஐ.வி.எப்.,) மையங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை காளான்களைப் போல் பெருகி வருகின்றன.
சில மையங்களில் நெறிமுறையற்ற நடைமுறை பின்பற்றப்பட்டதால் பார்லிமென்ட்டில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டம் 2021ல் இயற்றப்பட்டது.
இதன்படி வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்க விரும்பும் தம்பதி விதிமுறைகள்படி வயது, நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். வணிக ரீதியான வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் இயற்றிய 90 நாட்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் தேசிய, மாநில வாடகைத் தாய் வாரியங்களை அமைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் அத்தகைய வாரியம் செயல்படுகிறதா என்பது தெளிவாகவில்லை.
சட்டம், விதிகளை செயல்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் (சென்னை தவிர) சுகாதார சேவை இணை இயக்குனர்கள் தலைமையில் அதிகாரப்பூர்வ ஆணையமாக அமைத்து மாநில அரசு 2022 செப்.,19 ல் அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை இணை இயக்குனர் (சட்டங்கள்) அதிகாரப்பூர்வ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமானது மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைப்பது.
முக்கியமான தகுதி சான்றிதழை வழங்கும் அதே வேளையில் மாவட்ட வாரியமானது, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிக்கு, சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு மருத்துவச் சான்று வழங்க வேண்டும்.
வாடகைத் தாய் சட்டத்தில் மாவட்ட மருத்துவ வாரியம் என்பது தலைமை மருத்துவ அதிகாரி அல்லது தலைமை பொது அறுவைச் சிகிச்சை நிபுணர் அல்லது சுகாதார சேவை இணை இயக்குனரின் தலைமையில் மாவட்ட தலைமை மகப்பேறு டாக்டர் அல்லது தலைமை குழந்தைகள் நல டாக்டரை உள்ளடக்கியது. இத்தகைய மாவட்ட வாரியங்கள் அமைக்கப்பட்டதாக தெரியவில்லை.
சான்றிதழ் பெறும் நாளில் தம்பதியருக்கு 23-- 50 வயது (பெண்) மற்றும் 26--55 (ஆண்) வயது இருக்க வேண்டும். அதாவது பல ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகள், குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி வாடகைத் தாய் மூலம் மட்டுமே என்பதை ஏற்கும் கூடுதல் சுமையை எதிர்கொண்டுள்ளனர்.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு மருத்துவமனையை அணுகுவதற்கு முன் விண்ணப்பித்து சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசு ஜன.,6 ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலியில் மாவட்ட மருத்துவ வாரியம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகவில்லை. அமைக்கப்படவில்லை எனில் வாரியத்தை உடனடியாக அமைக்க தமிழக சுகாதாரத்துறையின் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத் தாய் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய மருத்துவ வாரியங்களை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வழக்கில் மனுதாரர்களில் ஒருவரின் மனைவி 1973 ல் பிறந்தவர். அவருக்கு தகுதிச் சான்று 2023 அக்.,26 க்குள் வழங்கப்படாவிடில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் உரிமையை இழக்க நேரிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 4 வாரங்களில் மனுவை விசாரித்து தகுதி அடிப்படையில் பைசல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.