விருதுநகர்: கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக 60வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோயாளிகள் வெயிலின் தாக்கத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மனித உடலில் 60 சதவீதம் நீர் தான் உள்ளது. உடலில் நீர்ச்சத்து அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடாது. உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களும் இயங்குவதற்கு நீர் அவசியம்.
கோடையில் அதிகமாக வியர்ப்பதால், சுவாசத்திலும் நீர்ச்சத்து வெளியேறுகிறது. எனவே நீர்ச்சத்து குறையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. சுத்தமான குடிநீரை உடலுக்கு தேவையான அளவு அருந்த வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பது நல்லது. சுகாதாரமற்ற குடிநீரால் கோடைகாலத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் ஏற்படும். அப்போது நீர்ச்சத்து குறைவு ஏற்படும். நீர்ச்சத்து குறைவால் சிலருக்கு வலிப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நீர்ச்சத்து குறைபாடு, சிறுநீர்ப்பையிலும், சிறுநீர் குழாயிலும், சிறுநீரகத்திலும் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது. சிறுநீர் எரிச்சல், நிறம் மாறுதல், சிறுநீர் கல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. தோல்எரிச்சல், பூஞ்சைநோய், புண்கள், வெடிப்பு உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படலாம்.
தினமும் காலை, மதியவேளைகளில் சாதாரண வெப்பநிலையில் உள்ள நீரில் குளிக்க வேண்டும். தடிமனான ஆடைகளை அணியாமல், மெல்லிய காட்டன் ஆடைகளை அணியவேண்டும். வெளியில் செல்லும் போது கருப்புநிற ஆடை அணிவதை தவிர்க்கவேண்டும்.
உப்புச்சத்து
கோடையில் பழங்கள் மற்றும் உணவு பண்டங்கள் விரைவில் அழுகிவிடும். அவற்றை உண்ணும் முன் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவேண்டும். மோரில் உப்பு கலந்து குடிப்பதால் உடலுக்கு தேவையான உப்புச்சத்து கிடைக்கிறது. எண்ணெய் கலந்த உணவுபொருட்களை தவிர்க்கவேண்டும். தலையில் குறைவான அளவு முடி இருக்கும் படி வெட்டிக்கொள்ளலாம்.
வாகனங்களில் செல்லும் போது வியர்வையினால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல வேண்டும். தாகம் எடுக்கும் போது தாமதிக்காமல் தண்ணீரை குடிக்க வேண்டும். உணவை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். சுகாதார முறையில் தயாரித்த மூடிவைத்த உணவை உண்ண வேண்டும். துரித உணவு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.
மதியவெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். ஒரு வேளை செல்ல நேர்ந்தால் குடையுடன் செல்லலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணவேண்டும்.
தினமும் இருமுறை குளிக்கவேண்டும். அதிகமாக வியர்க்கும் அக்குள், தொடைப்பகுதியை சுத்தமாக வைக்கவேண்டும். பருத்தி ஆடைகளை அணியவேண்டும். துவைத்த துணிகளையே அணியவேண்டும். தினமும் கால்களை கவனித்து புண் மற்றும் நிறமாற்றம் இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும்.
- டாக்டர் சங்குமணி டீன், விருதுநகர் அரசு மருத்துவமனை