மதுரை: எனது மகன் வயது 47. மனஅழுத்தத்திற்கு கடந்த 20 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். தற்போது மனஅழுத்தம் இல்லாததால் மாத்திரையும் நிறுத்திவிட்டார். ஆனால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. மூளை ஆணையிட்டாலும் மனம் அதில் ஈடுபடாமல் சும்மா இருக்கிறார். இதற்கு மருத்துவம் உண்டா.
- தெய்வநாயகம், விருதுநகர்
மனச்சோர்வு, மனஎழுச்சி போன்ற நோய்கள் அவ்வப்போது வரும் போகும். இதற்கு மாத்திரை கொடுப்பார்கள். நல்ல மனநிலையில் நோயாளி இருக்கும் போது, நோய் வராமல் தடுப்பதற்கு 'மூடு ஸ்டெபிலைசர்' தருவர். மனச்சிதைவு நோய்க்கு தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உங்கள் மகன் 20 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டுள்ளார். எந்தளவு மாத்திரை சாப்பிட்டாரோ அந்தளவு தொடர்ந்து சாப்பிட வேண்டும். அவர் மாத்திரையை நிறுத்தியதால் தான் இந்த பிரச்னையே. மீண்டும் மனச்சிதைவு அறிகுறி ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. அதனால் தான் இயல்பான வேலையில் ஈடுபடமுடியவில்லை. மீண்டும் மனநல டாக்டரிடம் உங்களை மகனை பரிசோதித்து அவர் கொடுக்கும் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடச் சொல்லுங்கள்.
- டாக்டர் டி.குமணன்மனநலத்துறை தலைவர் (ஓய்வு) மதுரை அரசு மருத்துவமனை
எனது மகனுக்கு ஐந்து வயதாகிறது. வெயில் காலம் துவங்கிய உடனே அடிக்கடி அவனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு வருகிறது. தவிர்க்க என்ன செய்யலாம்.
-- பிரபாகரன், சிவகாசி.
கோடை காலம் துவங்கிய உடனே பொதுவாகவே குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் வருகின்றது. குழந்தைகள் வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த உடனேயே கைகளை கழுவச் செய்ய வேண்டும். முடிந்த வரை குளிக்கச் செய்யலாம். நகம் வெட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், இளநீர் தவிர வெளி உணவு வகைகள், ஸ்நாக்ஸ் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் , வாந்தி அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
- டாக்டர் சத்யா பாரத்குழந்தைகள் நல மருத்துவர்சிவகாசி.
எனது 7 வயது மகன் படர்தாமரை அரிப்பால் சிரமப்படுகிறான், நிரந்தர தீர்வு உண்டா.
- க.செல்வி, ராமநாதபுரம்.
குழந்தைகள், சிறுவர்களுக்கு உள்ளாடைகள் அணிவதில் சுத்தத்தை கடை பிடிக்க வேண்டும். சிறுநீர், மலம்கழிதலை கவனித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வெயில் காலத்தில் தோல் எரிச்சல் அதிகமாக இருக்கும். இதனை போக்க தினமும் இருமுறை குளிக்க வேண்டும். படர் தாமரை, அரிப்பு உள்ள இடத்தில் அருகம்புல், புங்கன் தைலம் இடலாம். தேங்காய் எண்ணெய் தடவலாம். குறிப்பாக குறைந்த தண்ணீர் உள்ள வறண்ட குளத்தில் குளிக்க கூடாது. எண்ணெய் பலகாரங்கள், அசைவத்தை தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் ஜி.புகழேந்திஉதவி மருத்துவ அலுவலர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்.
- ஆர்.முத்து, போடி
-சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலமும், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரகத்தில் தேங்கி கற்களாக உருவாகிறது. உடலில் கழிவுகள் தேங்காத வகையில் தினமும் குறைந்தது 2 அல்லது- 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், அன்னாசி பழம், எலுமிச்சை சாறு நார்ச்சத்து நிறைந்த பழங்கள், நீர் சத்துகள் நிறைந்த காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு, பாதாம் பருப்பு, கேரட், வாழைப்பழங்கள் சாப்பிடலாம். அதிக அளவு உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கால்சியம், ஆன்டாசிட் மருந்துகளை குறைத்து கொள்ள வேண்டும்.
- -டாக்டர் பி.சண்முக அரவிந்த் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி