மதுரை: தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியம், நீர்வளத்துறையால் கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை பராமரிக்க அரசு நிதி ஒதுக்காவிட்டால் அவை நிரந்தர ஆக்கிரமிப்பில் சிக்கி நீர்வழித்தடமும் நீராதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்கள், அவற்றின் வாய்க்கால்கள், நீர்வளத்துறையின் பாசன கண்மாய்கள், அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் அனைத்தும் நீர்ப்பாசனத்திற்கு பயன்பட்டன. குடியிருப்புகள் பெருகியதால் ஆங்காங்கே உள்ள கண்மாய்களின் பாசனப்பரப்பு குறைந்து நின்று போனது. பாசன வசதி இல்லாத கண்மாய்களையும், அவற்றின் வாய்க்கால்களையும் நீர்வளத்துறை பராமரிப்பது இல்லை. அதாவது இவற்றை பராமரிக்க தனியாக நிதி ஒதுக்குவதில்லை. இப்படி நீர்வளத்துறையின் கீழ் மட்டும் 500 கண்மாய்கள், வாய்க்கால்கள் அரசு ஆக்கிரமிப்பிலும், தனிநபர் ஆக்கிரமிப்பிலும் சிக்கி சீரழிகின்றன.
ஊராட்சி, நகர்ப்புறம், மாநகராட்சி பகுதிகளில் கைவிடப்பட்ட கண்மாய், நீர்நிலை இருந்தால் அந்தந்த கிராம, நகராட்சி, மாநகராட்சிகளே பராமரிக்க வேண்டும் என 1997 ல் நகராட்சி துறையின் சார்பில் அரசாணை 277 வெளியிடப்பட்டது. பல்வேறு திட்டங்களின் கீழ் இவற்றுக்கு தொடர் நிதி ஒதுக்கப்பட்டாலும் கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை கண்டு கொள்வதே இல்லை.
பாசனத்திற்கு பயன்படா விட்டாலும் தொடர் மழை பெய்து ஒரு கண்மாயில் 6 மாதத்திற்கு நீர் நிறைந்திருந்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் நீராதாரமாக நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு உதவும். 500 கண்மாய்களையும் முறையாக பராமரித்தால் தண்ணீர்ப் பஞ்சமின்றி எளிதில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.
சங்கிலித்தொடர் கண்மாய்களின் வாய்க்கால் அழிக்கப்பட்டால் திடீரென பெருமழை பெய்யும் போது ஊருக்குள் தண்ணீர் புகுந்து நகரே அழியும் அபாயமுள்ளது. வாய்க்கால்களின் வழித்தடத்தை அழியாமல் பாதுகாத்தால் மழை பெய்யும் போது தண்ணீர் தானாக கண்மாயை அடைந்து நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தும்.
பாசன வசதியுள்ள கண்மாய்களையும், வாய்க்கால்களையும் பராமரிப்பதற்கு மட்டும் நீர்வளத்துறையின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. நிதியில்லாத காரணத்தால் நீர்வளத்துறையும் கண்டுகொள்வதில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் நிதியில் கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை பராமரிக்க வேண்டும் அல்லது தனியாக நீர்வளத்துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.