பிளஸ் 2 தேர்வு ஒரு வழியாக நாளை நிறைவு பெறுகிறது. அடுத்து மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஒரே எதிர்பார்ப்பு நல்ல கல்லுாரி, சிறந்த துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதே. ஆனால், எந்த கல்லுாரி, என்ன படிப்பு என்பதை உறுதி செய்வதில்தான், ஓராயிரம் குழப்பங்கள் எழும். அதுபோன்ற ஒட்டுமொத்த குழப்பங்களுக்கும் தெளிவை அளிக்கும் வகையில், 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி கோவையில் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கிறது.
மாணவர்களின் நலன் கருதி 'தினமலர்' சார்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 'தினமலர்', ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்களுடன் இணைந்து, கோவை அவினாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் முக்கிய பங்களிப்பாளர்களாகவும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, கே.எம்.சி.எச்., என்.ஜி.பி கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனம், எஸ்.என்.எஸ்., கல்விநிறுவனங்கள், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்விநிறுவனங்கள், ஐ.சி.எப்.ஏ.ஐ., உயர்கல்வி நிறுவனம் ஸ்பான்சர்களாகவும் 'தினமலர்' நாளிதழுடன் கரம் கோர்க்கின்றன.
120 கல்லுாரிகள்
கண்காட்சி மற்றும் கருத்தரங்கு என இரு பிரிவுகளாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. கண்காட்சியில், 120 கல்லுாரிகளின் அரங்குகள் ஒரு கூரையின் கீழ் அமையவுள்ளன. மேலும், காலை, மாலை இரு பிரிவுகளாக பல்வேறு தலைப்புகளில் அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கவுள்ளனர்.
பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கட்டடவியல், கலை, அறிவியல், வணிகம், வெளிநாட்டு கல்வி வாய்ப்பு, கல்விக்கடன் பெறுதல், நுழைவுத்தேர்வுகள், கல்விஉதவித்தொகை, கவுன்சிலிங் நடைமுறை, கட்-ஆப், தொழில்முனைவோர் வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வகை படிப்புகள், வாய்ப்புகள் குறித்து தெளிவுபெறலாம். கல்லுாரி அரங்குகளில், விண்ணப்ப செயல்பாடுகள், கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டு அறிந்துகொள்ளலாம்.
டிரெண்டிங் பாடப்பிரிவுகள்
மேலும், பொறியியல் பிரிவுகளின் கீழ் டிரெண்டில் உள்ள டிரோன் இயக்கம், ஏ.ஐ., எம்.எல்., ஐ.ஓ.டி., பிளாக்செயின் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளின் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் வல்லுநர்கள் பேசவுள்ளனர்.
தவிர, போட்டித்தேர்வுக்கு கல்லுாரி முதலாம் ஆண்டு முதல், மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், முதல் மதிப்பெண் மாணவர்களுக்கு மட்டுமின்றி சராசரி மற்றும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் ஏற்ற பாடப்பிரிவுகள் குறித்து இதில் வழிகாட்டுதல் வழங்கப்படும். பிளஸ் 2 மட்டுமின்றி , பிளஸ்1 மாணவர்களும் இதில் பங்கேற்று அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
கருத்தரங்கில் மாணவர்களுக்கு கேட்கப்படும் எளிய கேள்விகளுக்கு விடையளித்து, லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகளையும் தட்டிச்செல்லலாம். மூன்று நாள் நிகழ்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி 6:30 மணி வரை நடைபெறும்.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் www.kalvimalar.com என்ற இணையதளத்திலோ அல்லது 91505-74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ பதிவு செய்துகொள்ளலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.