கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, நேற்று வந்த பெரும்பாலான பொதுமக்கள், நோயாளிகள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று கடந்த, 2020ல் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஊரடங்கு, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி
நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், ஓய்ந்து போன கொரோனா தொற்று பாதிப்பு கடந்த, 2022 ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பரவி, அடுத்த சில மாதங்களில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், தினசரி பாதிப்பு, 14 ஆக இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த, 30ல் நாடு முழுவதும், 3,095 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில், 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுமக்கள் கட்டாயம் நேற்று முதல் முகக்கவசம் அணிய வேண்டும் என, தமிழக சுகாதார துறை உத்தரவிட்டது.
அதன்படி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு முன், நேற்று காலை முதல், ஒலிப்பெருக்கி மூலம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான பொதுமக்கள், டாக்டர்கள்,
நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் முகக்கவசம் அணிந்தபடி வந்தனர்.
முகக்கவசம் அணியாமல் வந்த, பொது மக்களை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். பிறகு, வெளியில் சென்ற பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்த பிறகே, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்குள்
அனுமதிக்கப்பட்டனர்.