சாலைகளை ஆக்கிரமித்த
சீமை கருவேல மரங்கள்
கரூர் அருகே, கொளந்தானுாரில் ஏராளமானோர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காலைக்
கடன்களை கழிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானுாரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டது. ஆனால், தற்போது தார்ச்சாலையை மறைக்கும் அளவுக்கு சீமை கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், கொளந்தானுாரை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை அவசியம்.
சேதமான பி.எஸ்.என்.எல்.,
பெட்டி மாற்றப்படுமா?
கரூர்-சேலம் பழைய சாலை, வெண்ணை மலை
பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. திறந்தபடி உள்ள, பெட்டியில் மழை பெய்யும் போது, மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே,
சேதமடைந்த பி.எஸ்.என்.எல்., பெட்டியை
உடனடியாக மாற்ற, நடவடிக்கை எடுக்க
அதிகாரிகள் முன்வர வேண்டும்.
வாய்க்காலை துார் வாரணும்
எதிர்பார்க்கும் மக்கள்
கரூர் அருகே, எஸ்.வெள்ளாளப்பட்டியில் கழிவு
நீர் வாய்க்கால் செல்கிறது. தற்போது, வாய்க்காலில்
பல இடங்களில், மண் அடைப்பு உள்ளது. மேலும்,
அதிகளவில் செடிகள் முளைத்துள்ளன. அடைப்பு
காரணமாக வாய்க்காலில் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்லாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில், கொசு உற்பத்தி ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட
வீடுகளில், வசித்து வரும் பொதுமக்கள் சிரமத்துக்கு
ஆளாகின்றனர். எனவே, வாய்க்காலை துார் வார
கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
வீட்டு வசதி வாரிய வீடுகள்
குடியிருப்பு வாசிகள் தவிப்பு
வீட்டு வசதிவாரிய வீடுகள் மோசமான நிலையில் உள்ளதால், குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.
கரூர், தான்தோன்றிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, ஆறு பிளாக்குகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கட்டடம் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாவதால், பெரும்பாலான குடியிருப்புகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, இரண்டு பிளாக்குகள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சில பிளாக்குகளில் மட்டுமே மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
வீடுகளை சீரமைத்து தர பல முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மேலும் வளாகத்தை சுற்றிலும் சாக்கடை அடைப்பு, குடிநீர் குழாய் உடைப்பு, மோசமான நிலையில் உள்ள தரைத்தள நீர்தேக்க தொட்டி போன்ற குறைபாடுகள் உள்ளன. தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முத்து மாரியம்மன், பகவதி
அம்மன் விழா இன்று துவக்கம்
தான்தோன்றிமலை முத்து மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா, இன்று தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற, தான்தோன்றிமலை முத்து மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா இன்று அமராவதி ஆற்றில் இருந்து, ஊர்வலமாக கம்பம் கொண்டு செல்லப்பட்டு கோவிலில் நடப்படுகிறது. அதை தொடர்ந்து வரும், 7 ல் பூச்சொரிதல் விழா, 9 ல் சிறப்பு கரக ஊர்வலம், 11ல் அலகு குத்துதல், கரகம், நேர்த்திக்கடன் மற்றும் பூக்குழி இறங்குதல், 13ல் மாவிளக்கு ஊர்வலம், இரவு கம்பம், சிறப்பு கரகம் ஆற்றுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
திருவிழாவையொட்டி, இன்று முதல் வரும், 16 வரை பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை, பெரிய தனக்காரர் சண்முகம், கொத்துகாரர்கள் நடராஜன், ராம்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து
வருகின்றனர்.