''ஒவ்வொருவர் வாழ்க்கையும், மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். நீதியின் பால் வாழ்வது தான் வாழ்க்கை. இது அனைவருக்கும் பொருந்தும். இளம் வக்கீல்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசினார்.
ஈரோட்டில், 'தி அட்வகேட்ஸ் அசோசியேஷன்' சார்பில் நேற்று நடந்த, மறைந்த மூத்த வக்கீல் சின்னசாமி நுாற்றாண்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
சின்னசாமி நுாற்றாண்டு மலரை வெளியிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:
தவறான மனிதன், தவறான வழியில் வந்தவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், பாராட்டப்பட வேண்டியவர்கள் அல்ல.
தவறு நடக்கும் போது தட்டி கேட்கவும், நல்ல விஷயங்கள் நிகழும் போது பாராட்டவும், அதை அறிந்து கொள்ளும் வகையிலான அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொருவர் வாழும் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். நீதியின்பால் வாழ்வது தான் வாழ்க்கை. இது அனைவருக்கும் பொருந்தும். இதை இளம் வக்கீல்கள் ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி, கிருஷ்ணகுமார், மகாதேவன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாசிலாமணி, மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.