கரூர்: கரூர் அருகே, பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன பங்குதாரர்கள் வீடுகளில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று சோதனை செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புஞ்சை புகழூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 50; இவர், வேலாயுதம்பாளையத்தில் இயங்கி வரும், தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடியே, 28 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆனால், நிதி நிறுவனம் குறிப்பிட்டபடி, வட்டி தொகை தராததால், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம், நிதி நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்கள் விஜயகுமார், குணசேகரன், தங்கராசு, முருகன், சுரேஷ், பெரியசாமி, சதீஸ்வரன், கனகராஜ், செல்வராஜ், கந்தசாமி ஆகிய, 10 பேரை கரூர் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து, கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, நிதி நிறுவனங்களில் பண பரிமாற்றம் குறித்த விபரங்கள், சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும், தனியார் நிதி நிறுவனங்களில் பண மோசடி செய்து, பாதிக்கப்பட்டவர்கள், கரூர் வெங்கமேடு காமதேனு நகரில், இயங்கி வரும், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என, இன்ஸ்பெக்டர் செல்வமலர் தெரிவித்துள்ளார்.