செய்திகள் சில வரிகளில்... கரூர் | கரூர் செய்திகள்| News in few lines... Karur | Dinamalar
செய்திகள் சில வரிகளில்... கரூர்
Added : ஏப் 02, 2023 | |
Advertisement
 

குளித்தலை அரசு கல்லுாரி
பயிற்சி நிறைவு நாள் விழா
குளித்தலை, டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லுாரியில், மென்திறன் பயிற்சி வகுப்பு இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. ஆங்கிலத்துறை தலைவர் ஹில்டா தேன்மொழி வரவேற்றார். முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

கரூர் அரசு கலைக் கல்லுாரி
பேராசிரியரும், மாவட்ட மென்திறன் பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான
பிரபாகரன் பேசுகையில்,''மாணவர்களாகிய நீங்கள், இந்த சமூகம் உங்களை பார்த்து அவன் தான் மனிதன் என்று போற்றக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டும். கல்லுாரி படிப்பு முடித்தவுடன் உலகம் உங்களை வரவேற்கும். அதை பயன்படுத்திக் கொண்டு, திறமைக்கேற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
மென் திறன் பயிற்சி அறிக்கையை, ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி சமர்ப்பித்தார். பேராசிரியர்கள், மென்திறன் பயிற்சியாளர்கள், மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர்.


பாசன வாய்க்காலில்
கழிவு நீர் கலக்கல்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், மஞ்சமேடு அருகில் பாசன வாய்க்கால் செல்கிறது. வாழை, வெற்றிலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது பாசன வாய்க்காலில் தண்ணீரின்றி கழிவு நீர் செல்கிறது. இது விவசாய நிலங்களுக்கு செல்வதால் வெற்றிலை, வாழை பயிர்களில் பாதிப்பு ஏற்படுகிறது. வாய்க்காலில் கழிவு நீர் கலக்காமல் இருக்க, உறிஞ்சும் குழிகள் அமைத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையோரம் குப்பை
சுகாதார கேட்டால் தவிப்பு
கரூர் மாநகராட்சி பகுதியில் கொட்டப்படும் குப்பை அனைத்தும் அகற்றப்பட்டு, வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த பணிக்கென மாநகராட்சி பகுதியில் நுாற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கரூர் தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையோரம், கடந்த சில நாட்களாக அகற்றப்படாத வகையில் குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிற்பேட்டை பகுதியில், சாலையோரம் கொட்டிக் கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.

மகிளிப்பட்டி கிராமத்தில்
குடிநீர் குழாய் பராமரிப்பு
மகிளிப்பட்டி கிராமத்தில், குடிநீர் குழாய்
பராமரிப்பு பணியில் பஞ்சாயத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி
கிராமத்தில் குழாய் மூலம் குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் இருந்து செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடிநீர் குழாய் சேதம் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் தடை இருந்தது. இந்நிலையில், நேற்று காலை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் மூலம் குடிநீர் குழாய் சரி பார்க்கும் பணி நடந்தது. இதையடுத்து, குடிநீர் சீராக வினியோகம் செய்யும் பணி துவங்கியது.

தொழில் பயிற்சி முடித்தவர்கள்
இணையதள பதிவு சரி செய்யலாம்
தொழில் பயிற்சி முடித்தவர்கள், இணையதள
பதிவுகளை சரி செய்ய விண்ணப்பிக்கலாம் என, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2014 முதல் 2021 வரை சேர்க்கை செய்யப்பட்டவர்கள், என்.சி.வி.டி., இணையதளத்தில் பதிவேற்றம் தகவல்களை சரி செய்து கொள்ளலாம். இதில், பயிற்சியாளர்களின் விபரங்களாகிய பயிற்சியாளரின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் சரி செய்து கொள்ள விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதை பின் பற்றி அந்தந்த தொழிற்
பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று அல்லது ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

மது பாட்டில் விற்பனை:10 பேர் கைது
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, எஸ்.ஐ., அழகுராம் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மாயனுார், குளித்தலை, வாங்கல், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் மற்றும் கள் விற்றதாக பூமா, 40, முருகன், 47, சண்முகம், 55, வளர்மதி, 50, கிருஷ்ணமூர்த்தி, 51 உட்பட ௧௦ பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 271 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபானங்கள் கடத்தல்
லாரி டிரைவர் கைது
குளித்தலை அடுத்த, சீதப்பட்டி மயிலம்பட்டி ரோட்டில் பால்மடைப்பட்டி பிரிவு அருகே, சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த டி.வி.எஸ்., மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர்.
மொபட்டில் உள்ள பெட்டியில், 114 மது பாட்டில்கள் கடத்தி கொண்டு வரப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிந்தாமணிப்பட்டி போலீசார் மதுபானங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டி.வி.எஸ்.. மொபட்டை பறிமுதல் செய்தனர். மதுபான பாட்டில்களை கடத்திய, செம்பியானநத்தம் பஞ்., மோளப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மருதமுத்து, 42, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளியை
தாக்கிய இருவர் கைது
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன், 39. இரண்டு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளி. இவர் கவுண்டம்பட்டியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச், 29 மாலை சூரியனுார் மேலத்
தெருவை சேர்ந்த முருகானந்தம், 39, பாலசுப்பிர
மணியம், 29, ஆகியோர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கினர். அப்போது பொருட்களின் விலையை குறைத்து வழங்க வேண்டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இருவரும் சேர்ந்து, மாற்றுத்திறனாளியை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, குழுமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
குளித்தலை எஸ்.ஐ., ரூபினி வழக்கு பதிந்து, பில்டிங் மேஸ்திரி முருகானந்தம், கொத்தனார் பாலசுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்தார்.

சாலை பணியாளருக்கு
பாராட்டு விழா
குளித்தலை, உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று, சாலை பணியாளர் சுப்பிரமணிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.
உதவி கோட்ட பொறியாளர் செந்தில் குமரன் தலைமை வைத்தார். உதவி பொறியாளர் சந்திரமோகன், அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ்குமார், சாலை ஆய்வாளர்கள் சேகர், பாலகிருஷ்ணன், இளநிலை உதவியாளர் நளினி ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சாலை பணியாளர் சங்க பொறுப்பாளர் சுந்தரம் நன்றி கூறினர்.

முருங்கை தொழிலை ஊக்குவிக்க
கடன் வழங்க வலியுறுத்தல்
முருங்கை விவசாயத்தை காப்பாற்ற, வங்கிகள் கடன் வழங்க முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை பயிரிடப்பட்டு வருகிறது. இலையில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் அதை சூப்பாகவும், பொரியல் செய்தும் சாப்பிடலாம். மேலும் பவுடராக தயாரித்து டீயாக பருகலாம். இதன் புண்ணாக்கு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த முருங்கை, சீசன் காலத்தில் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே, இத்தொழிலை நம்பியிருக்கும் க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, வங்கிகள் கடனுதவி அளிக்க முன்வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு தரப்பு தகராறு
போலீசார் வழக்கு
குளித்தலை அடுத்த. குருணியூர் கிராமத்தில் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே ஊரை சேர்ந்த இரு தரப்பினர் பயன்படுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இரு தரப்பினரையும் போலீசார் பலமுறை எச்சரித்து அறிவுரை வழங்கினர்.
இந்நிலையில் கடந்த, 30ல், குருணியூரை சேர்ந்த பிரபு, 37, ராதா, 33, வெள்ளைசாமி, 39, பெரியக்காள், 45, அம்பிகா, 25, லட்சுமி, 37, கருப்பசாமி, 53, மற்றொரு தரப்பை சேர்ந்த லோகநாதன், 37, வெற்றிவேல், 32, குணசேகரன், 27, பூங்குவனம், 45, கேசவன், 21, பழனியம்மாள், 45, பழனிசாமி, 41, ராணி, 34, முருகன், 45, ஆகியோர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மொபட் மீது வேன் மோதி டிரைவர் பலி
குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., வேதாச்சலபுரத்தை சேர்ந்த குமாரசாமி, 46, நாமக்கலில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலை முடித்துவிட்டு, டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸெல் மொபட்டில், குளித்தலையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது மணப்பாறை நெடுஞ்சாலையில், அய்யர்மலை தனியார் திருமண மஹால் அருகே தோகைமலையில் இருந்து குளித்தலை நோக்கி வந்த தனியார் பால் கம்பெனி வேன், மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமாரசாமி பலியானார். குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

கரூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில்
நாளை, நாளை மறுநாளும் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக, கரூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நாளையும், நாளை மறுநாளும் (3, 4ல்) இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
கரூர் மாவட்டம், குளித்தலை - லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் இடையே, பொறியியல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளையும், நாளை மறுநாளும் ( 3, 4ல்) நடக்கிறது. இதனால், மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சி செல்லும், எக்ஸ்பிரஸ்
ரயில் (எண்-06882) சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், திருச்சியில் இருந்து மாலை, 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06123) சேவையும், நாளையும், நாளை மறு நாளும்
(3, 4ல்) ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காளியம்மன் கோவில் திருவிழா
அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்
குளித்தலை, காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குளித்தலை, பெரிய பாலத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 37வது ஆண்டாக காளியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை விரதம் இருந்த பக்தர்கள் பரிசல் துறை காவிரி ஆற்றில் புனித நீராடி, 1,008 அலகு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து காவிரியாற்றில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பம்பை மேளங்கள் முழங்க கோவிலுக்கு வந்தனர்.
குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் ஊர்வலமாக கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X