கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், சுகாதாரமற்ற முறையில், உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு
நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அதில், ஏற்கனவே சுகாதாரமற்ற முறையில் டீ, காபி, எண்ணெய் பலகாரங்கள் மற்றும் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இந்நிலையில் கரூர் பஸ் ஸ்டாண்டில், 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்களை வெட்டி, பஸ்சில் ஏறி விற்பனை செய்கின்றனர். அதில், சிலர் பழங்களை கழிப்பிடம் அருகேயுள்ள பகுதி, பயணிகள் சிறுநீர் கழித்த இடங்களில் வைத்து வெட்டி, கவரில் போட்டு விற்பனை செய்கின்றனர்.
அதை வாங்கி சாப்பிடும் பயணிகளுக்கு, வயிற்று உபாதை உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்களை விற்பனை செய்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.