ஈரோடு: ஈரோடு, பெரியமாரியம்மன் வகையறா கோவில்களில் விழாவையொட்டி நேற்று கம்பங்களுக்கு மக்கள் புனித நீர் ஊற்றி, அக்னி சட்டி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம், 21ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய மூன்று கோவில்களிலும் கடந்த, 25ல், கம்பம் நடப்பட்டது.
விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதல், ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, அம்மனை வழிபட்டு சென்றனர்.
காவிரியாற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். ஏராளமானோர் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு
தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை(4) காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா, நாளை மறுதினம் (5) சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம், 8ல், கம்பம் பிடுங்கும் விழா, மஞ்சள் நீராட்டு விழா
நடைபெறுகிறது.