திருச்சி : திருச்சியில், கடத்தல் தங்கம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், நகைகளுடன் கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டு, கடத்தல் கும்பலை சேர்ந்தவரிடம் விசாரிக்கின்றனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணியரிடம் தங்கம் வாங்கவும், கடத்தி வரும் தங்கத்தை பெற்றுச் செல்லவும் சில புரோக்கர்கள் உள்ளனர்.
திருச்சி, தென்னுார் பகுதியைச் சேர்ந்த சாதிக்பாட்சா, 37, என்பவர், நேற்று முன்தினம் இரவு, திருச்சி விமான நிலையத்தில், 1 கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை, வெளிநாட்டு பயணியரிடம் வாங்கினார்.
அவற்றுடன் சாதிக்பாட்ஷா, தன் நண்பர்கள் நால்வருடன் காரில் சென்றார். அவர்களை, தென்னுார் மூல குலத்தெரு பகுதியில், எட்டு பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, சாதிக் பாட்சாவையும், தங்கத்தையும் கடத்தியது.
அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு, கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன், 22, என்பவர் காரில் ஏறி தப்பிய போது, தவறி விழுந்தார்.
பொதுமக்கள் அவரை பிடித்து, தில்லை நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரித்ததில், கடத்தல் தங்கம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையால், தங்கத்தை பறிக்க வந்தது தெரியவந்தது.
அதே சமயம், சமயபுரம் பகுதியில், சாதிக்பாட்ஷாவை விட்டு, கடத்தல்காரர்கள் தப்பியோடி விட்டனர்.
சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்தில், போலீசாரால் மீட்கப்பட்ட சாதிக்பாட்ஷா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.