தினமலர் நாளிதழ், ஸ்டாரட்ஸ் அகாடமி சார்பில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நேற்று நடந்த 'நீட்' மாதிரி நுழைவுத்தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மதுரை : தினமலர் நாளிதழ் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்கால நலன்கருதி தொடர்ந்து கல்விசார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக பிளஸ் 2 முடித்து டாக்டர் படிப்பு கனவில் உள்ள மாணவர்களுக்காக ஆண்டுதோறும் 'நீட்' மாதிரி நுழைவுத்தேர்வு தினமலர் நாளிதழ் நடத்தி வருகிறது.
நேற்று நடந்த மாதிரி தேர்வில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:
பிரதான தேர்வை எதிர்கொள்ள உதவும்
பிரணவ் சுந்தர், மதுரை: பிரதான 'நீட்' தேர்வு போன்று மாதிரி தேர்வு வினாத்தாளும் கஷ்டமாக இருந்தது. நிறைய வினாக்கள் யோசித்து விடை அளிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக வேதியியல், தாவரவியல் வினாக்கள் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் வினாக்கள் கொஞ்சம் கடுமையாக இருந்தன. பிரதான 'நீட்' தேர்வு நேரத்திற்குள் எப்படி தேர்வை எதிர்கொள்வது என்பதற்கு இந்த மாதிரி நுழைவுத்தேர்வு பயனுள்ளதாக இருந்தது.
வெற்றி பெறுவது நிச்சயம்
அங்காள ஈஸ்வரி, மதுரை: நான் இரண்டாவது முறையாக தினமலர் நாளிதழின் மாதிரி நுழைவுத்தேர்வில் பங்கேற்றேன். பிரதான தேர்வை 3 முறை எழுதியுள்ளேன். மாதிரி தேர்வில் இயற்பியல், வேதியியல் வினாக்கள் கடுமையாக இருந்தன. சில வினாக்கள் எளிதாகவும், குழப்பும் வகையிலும் இருந்தன. இருந்தாலும் சமாளித்து எழுதிவிட்டேன். இதன்மூலம் மே 7ல் நடக்கும் பிரதான 'நீட்' நுழைவுத்தேர்வை பயமின்றி தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன்.
தினமலர் நாளிதழுக்கு பாராட்டு
ராஜலட்சுமி, மதுரை: பள்ளி படிப்பை முடித்ததும் எழுதிய முதல் தேர்வு இது. முதலில் பயம், பதட்டம் இருந்தது.
தேர்வு மையத்திற்குள் நுழைந்ததும் எந்த அறை ஒதுக்கப்பட்டுள்ளது,என்னென்ன பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது போன்றவற்றை முதன்முறையாக நேரடியாக அறிந்தது பயனுள்ளதாக இருந்தது. 3 மணி நேரம் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தபின், உண்மையிலே 'நீட்' தேர்வை எழுதி வந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. எங்களை போன்ற மாணவ, மாணவியரின் நலன்கருதி தினமலர் நாளிதழ் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
மாதிரி தேர்வுக்காக படித்தேன்
ரட்சனாதேவி, பரமக்குடி, ராமநாதபுரம்: மாதிரி நுழைவுத்தேர்வுதானே என்று பார்க்காமல் இதற்காக தினமும் பாடங்களை படித்தேன். அதனால் அனைத்து வினாக்களையும் எழுத முடிந்தது. அதேசமயம் இயற்பியல், வேதியியல் கடுமையாக இருந்தது போல் தோன்றியது. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் எப்படி பதில் அளிக்க முடியும் என்பதற்கு ஒரு களப்பயிற்சியாக இத்தேர்வு இருந்தது.
இதன்மூலம் பிரதான தேர்வை தைரியமாக எழுதி வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தேர்வு பயம் போய்விட்டது
ஜெமின் பாத்து, காரேந்தல், விருதுநகர்: முதன்முறையாக 'நீட்' தேர்வு எழுத உள்ளேன். அதற்கு முன்பாக மாதிரி நுழைவுத்தேர்வை எழுதியதால் மெயின் தேர்வு குறித்து ஒரு 'ஐடியா' கிடைத்துள்ளது.
தேர்வு பயம் போய்விட்டது. தாவிரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தன.
சில வினாக்கள் மீண்டும் மீண்டும் வேறு விதமாக கேட்கப்பட்டது போல் தோன்றியது.
இத்தேர்வை எழுதியதன் மூலம் பிரதான தேர்வில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கூறினர்.
தினமலர் நாளிதழ், ஸ்டாரட்ஸ் அகாடமி சார்பில் நேற்று நடந்த 'நீட்' மாதிரி நுழைவுத்தேர்வின் முடிவுகள் நாளை(மே 2) தினமலர் நாளிதழில் வெளிவரும்.