இடைப்பாடி: ''அனைத்து மக்களையும், 'குடி'காரராக மாற்றும் எண்ணத்தில், தி.மு.க., அரசு செயல்படுகிறது,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க., பொது செயலராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், அவரது சொந்த தொகுதியான, சேலம் மாவட்டம் இடைப்பாடிக்கு, நேற்று வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெள்ளரிவெள்ளியில் பழனிசாமி பேசியதாவது:
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை, 100 ஏரிகளில் நிரப்ப, எனது தலைமையிலான அரசு, 562 கோடி ரூபாய் ஒதுக்கி, தொடங்கி வைத்தது. முதல் கட்டமாக, ஆறு ஏரிகளில் தண்ணீர் நிரப்பி, அதையும் தொடங்கி வைத்தேன். தற்போது இப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அடுத்து வரும், அ.தி.மு.க., அரசு தான், இத்திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கும்.
அ.தி.மு.க.,வின், ஒன்றரை கோடி உறுப்பினர்கள் ஆதரவுடன், பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வருவதில் மகிழ்ச்சி.
தி.மு.க., ஆட்சியில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானத்தில் மதுக்கடை திறக்கிறார்கள். பட்டனை அழுத்தினால், மாலில் மது கிடைக்கும் என கூறுகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மக்களையும், 'குடி'காரராக மாற்றும் எண்ணத்தில், தி.மு.க., அரசு செயல்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், ஏரி மண்ணை, வி.ஏ.ஓ.,விடம் அனுமதி பெற்று, விவசாயிகள் சுதந்திரமாக எடுத்து வந்தனர். ஆனால் இன்றைய, தி.மு.க., அரசு கொள்ளையடிக்கும் எண்ணத்தில் செயல்படுவதால் கொலைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், மூட்டை துாக்குவோர் அண்ணா தொழிற்சங்கத்தை, தொடங்கி வைத்தார்.