பவானிசாகர்: சந்தன மரக்கட்டை கடத்திய, மூவரை, பவானிசாகர் வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் சந்தன மரக்கட்டை வெட்டி கடத்தப்படுவதாக, பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பவானிசாகர் ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில், வெள்ளியம்பாளையம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது டூவீலரில் மூன்று பேர் வந்தனர். நிறுத்தி சோதனை செய்ததில், 40கிலோ எடையில் சந்தன மரக்கட்டைகள் இருந்தன. விசாரணையில் மூவரும் பனையம்பள்ளி அருகே சொலவனுார் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி, 37, அவர் மனைவி பெரியம்மாள், 34; தொப்பம்பாளையம், மணல் மேட்டை சேர்ந்த ராஜேஷ்குமார், 22, என்பது தெரிந்தது. மூவரும் சந்தன மரக்கட்டைகளை வெட்டி கடத்தி எடுத்துச் சென்றது தெரியவந்தது.
சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டா, புறம்போக்கு நிலங்களில், சந்தன மரங்களை தொடர்ந்து வெட்டி கடத்தும் செயலில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்த இரண்டு சந்தன மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் அறிவுரைப்படி, வனக்குற்ற வழக்கு பதிந்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.