திருச்சி,-இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக, போலி ஆவணங்களை தாக்கல் செய்த வழக்கில், 22 ஆண்டுகளுக்கு பின், திருச்சி வக்கீல் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில், 2001ல் நடந்த விபத்து தொடர்பான வழக்கில், இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்கு, போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை, சி.பி.ஐ., விசாரித்தது.
இந்த வழக்கில், போலி ஆவணங்களை தாக்கல் செய்த திருச்சி வக்கீல் சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கு, திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 2013ல், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமின் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டது.
கடந்த 28ம் தேதி, வக்கீல் சுப்பிரமணியன், திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிபதி சாந்தி உத்தரவின்படி, திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.