நாகர்கோவில் : ''கனிம வளக் கொள்ளை விவகாரத்தில், சோதனை சாவடியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நாடகமாடுகிறார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் நேற்று அவர் கூறியதாவது:
குமரி மாவட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி பகுதியில் ஒரு மலை காணாமல் போய்விட்டது. தோட்டியோடு பகுதியில் மலைகள் உடைக்கப்பட்ட நிலையில் நிற்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் சென்றது தொடர்பாக, 1,038 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் 207 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. மேலும், 400 டாரஸ் லாரிகள் இயங்கி வருகின்றன.
இதை தடுக்க வேண்டிய அமைச்சர் மனோ தங்கராஜ், இரண்டு நாட்களுக்கு முன் ஏதோ சோதனை சாவடிக்கு சென்று நாடகமாடியது போல தெரிகிறது. லாரிகளை யார் அனுமதித்தது; எஸ்.பி., என்ன செய்கிறார் என, அமைச்சர் கேட்கிறார். இதுபோன்று மக்களை ஏமாற்றும் வேலை எடுபடாது.
கனிம வள கொள்ளைக்கு எதிராக கனிம வள கடத்தல் இயக்கம் நடத்தும் போராட்டத்துக்கு பா.ஜ., ஆதரவளிக்கும். நான் மத்திய அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த, 15 திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. காங்., - எம்.பி., விஜய்வசந்த் அதை நிறைவேற்றிக் காட்டட்டும்.
'டாஸ்மாக்' கடையில் எவ்வளவு, 2,000 ரூபாய் நோட்டு வருகிறது என்பதை பார்க்க வேண்டும். இதெல்லாம் சிலருக்காக செய்யப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் உள்நோக்கம் விரைவில் தெரிய வரும். பா.ஜ., அரசின் ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் ஜூன் 4ல் நாகராஜாகோவில் திடலில் நடக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார்.