நாகர்கோவில்:கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு படகு சேவையை துவக்கிய அமைச்சர் வேலு, பாதுகாப்பு உடைகளை அணியாமல், கடலில் படகில் பயணம் செய்தது பலரையும் முகம் சுளிக்கச் செய்தது.
கன்னியாகுமரியில் இருந்து, 7 கி.மீ.,யில் வட்டக்கோட்டை என்ற பழமையான கோட்டை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை, பழங்கால மன்னர்களின் போர் திறன், கடல் போர் தந்திரங்களை விளக்கும் இடமாக உள்ளது.
இதை காண, கன்னியாகுமரியில் இருந்து கடலில் 7 கி.மீ., பயணிக்கும் வகையில், தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற இரண்டு படகுகள் நேற்று முதல் இயக்கப்பட்டன.
இதை, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், கரையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை, படகில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் படகில் பயணித்தனர். அவர்களில் ஒருவர் கூட, பாதுகாப்பு உடைகளை அணியவில்லை. அந்த உடைகள் அருகில் கிடந்தன.
வழக்கமாக, பயணியர் அனைவரும் பாதுகாப்பு உடை அணிந்த பிறகே, விவேகானந்தர் பாறைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
ஆனால், நேற்று அமைச்சர் மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் அணியவில்லை.
பின், கடல் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடிக் கூண்டு பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்.
அமைச்சர் வேலுவுடன் அமைச்சர் மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.,க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.