நாகர்கோவில்:கன்னியாகுமரியிலிருந்து வட்டக்கோட்டைக்கு படகு சேவையை துவக்கிய அமைச்சர் வேலு கடலில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியையும் துவக்கினார்.
கன்னியாகுமரியில் இருந்து ஏழு கி.மீ. துாரத்தில் வட்டக்கோட்டை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை மன்னர் கால போர் தந்திரங்களை விளக்கும் இடமாக உள்ளது. இதை காண கடலில் ஏழு கி.மீ. துாரம் பயணிக்கும் வகையில் நேற்று முதல் தாமிரபரணி திருவள்ளுவர் என இரண்டு படகுகள் இயக்கப்படுகின்றன.
இதை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கினார். கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது. 4 மீட்டர் அகலம் 97 மீட்டர் நீளத்தில் கட்டப்படும் இப்பாலத்துக்கான பணியையும் அமைச்சர் வேலு துவக்கினார்.
பின் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். விபத்துக்களை குறைக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் ராஜேஷ்குமார் மேயர் மகேஷ் கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விதிமீறலாமா
படகு சேவையை துவக்கி வைத்த பின் அமைச்சர்கள் வேலு மனோதங்கராஜ் உள்ளிட்டோர் விவேகானந்தர் பாறைக்கு படகில் உயிர்பாதுகாப்பு ஜாக்கெட் அணியாமல் சென்றனர். இதை கவனித்த சுற்றுலா பயணிகள் அமைச்சர்களே விதிமீறலாமா என கேள்வி எழுப்பினர்.