நாகர்கோவில்:பூதப்பாண்டி அருகே சொத்துத் தகராறில் தாயை வெட்டிக் கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தந்தை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பெருங்கடை தெருவைச் சேர்ந்தவர் பவுல், 72. மனைவி அமலோற்பவம், 68. இவர்களுக்கு மோகன்தாஸ், 50, உட்பட இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.
மோகன்தாசுக்கும், பெற்றோருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது. பெற்றோரை மோகன்தாஸ் அடிக்கடி தாக்கி கொடுமைப்படுத்தினார். நேற்று முன்தினம் நள்ளிரவு மோகன்தாஸ், தாய், தந்தையை சரமாரியாக வெட்டினார்.
இதில், சம்பவ இடத்திலேயே தாய் இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் தந்தை அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பத்து இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
மோகன்தாஸ் பூதப்பாண்டி போலீசில் சரணடைந்தார்.
மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால், தனக்கு சேர வேண்டிய சொத்தை தராமல் சகோதரிக்கு எழுதி கொடுத்ததால், இருவரையும் வெட்டியதாக, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.