அண்ணாசதுக்கம், சென்னை, மெரினா கடற்கரை பகுதியில், அண்ணாசதுக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்துடன், கஞ்சா புகைத்தபடி நின்ற, 17 வயது சிறுவன் உட்பட இருவரிடம் விசாரித்தனர்.இதில், அவர்கள் வைத்திருந்தது, திருட்டு இருசக்கர வாகனம் எனத் தெரிந்தது.
அவர்களை கைது செய்து விசாரித்ததில், திருநின்றவூரைச் சேர்ந்த சத்ய பிரதீப், 20, பிரபல இருசக்கர வாகன திருடனான, 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது.
இதில், சிறுவன் பகல் நேரத்தில் ரயிலில் சமோசா விற்று வந்துள்ளார்.
மாலையில், கஞ்சா போதைக்காக சத்ய பிரதீப்புடன் சேர்ந்து வாகனங்கள் மற்றும் மொபைல்போன்கள் திருடியது தெரிந்தது. சிறுவன் மீது, வாகன திருட்டு வழக்குகள் உள்ளன.
திருநின்றவூரில் இரு சக்கர வாகனத்தை திருடி, புதுப்பேட்டையில் விற்க வந்துள்ளனர். மெரினா நீச்சல் குளம் அருகே, திருட்டு வாகனம் வாங்க வரும் நபருக்காக காத்திருந்த போது, இருவரும் சிக்கினர்.
இவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.