சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில், 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியில், தற்போது புதிதாக இணைக்கப்பட்ட, 139 பள்ளிகள் உட்பட, 420 பள்ளிகள் செயல்படு கின்றன. இந்த பள்ளிகளில், 1.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, மாநகராட்சி பணியாற்றி வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு மேல் படிக்கும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும், 'சிட்டிஸ் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0' திட்டங்கள் வாயிலாகவும், பல்வேறு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிவாரியாகவும், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வில், 85 சதவீதத்துக்கு மேல், மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இதற்காக, ஆங்கில மொழிக் கல்வி மற்றும் இதர பாடத் திட்டத்திற்கும், சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த வசதிகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பள்ளி நுழைவு வாயில்களில் விளம்பர பலகை வைக்க அறிவுறுத்தி உள்ளோம்.
பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டங்கள், முன்னாள் மாணவர்கள் வாயிலாகவும், மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 1.70 லட்சம் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 79.6 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 80.04 சதவீதம் பேரும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 86.8 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். 90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியதாவது:பெரும்பாலான பள்ளிகளில், 90 சதவீதம் தேர்ச்சி உள்ளது. சில பள்ளிகளில் மட்டும் தான், 80க்கும் கீழ் உள்ளது. வருங்காலங்களில், அனைத்து பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும். கற்றலில் ஆர்வம் குறைவு, வகுப்புகளுக்கு சரியாக வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- நமது நிருபர் -