சென்னை, சென்னை தரமணியில் உள்ள வேதியியல் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பாலிடெக்னிக் முதல்வர் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை தரமணியில் உள்ள, வேதியியல் தொழில்நுட்ப பாலிடெக்னிக், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படுகிறது. இங்கு, டிப்ளமா கெமிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமா பாலிமர் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில், மூன்றரை ஆண்டு படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர்கல்வித் துறையின், www.tnpoly.in என்ற இணையதளத்தில், ஜூன் 9 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிப்பில் சேரும் மாணவ - மாணவியருக்கு விடுதி வசதி, அரசின் கல்வி உதவி தொகை, இலவச பஸ் பாஸ், இலவச பாட புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.
படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, வளாக நேர்காணல் வழியே, முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.