திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த, வட மாநில தொழிலாளி பலியானார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியில், மேம்பாலம் கட்டும் பணியில், 50க்கும் மேற்பட்ட பீஹார் மாநில தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்தனர். அப்போது, தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த ஆசிட்டை, துக்கன், 60, என்பவர் தண்ணீர் என நினைத்து குடித்தார்.
இதில் மயங்கிய அவரை, சக ஊழியர்கள் மீட்டு, நாட்றம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.
திம்மம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.