செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆலந்தாங்கலை சேர்ந்தவர் சக்திவேல், 45, புதியதாக வீடு கட்டி வருகிறார்.
வீட்டின் மேல் மின் கம்பி செல்வதால், அதை அகற்ற வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அஜீத் பிரகாஷ் என்பவரை அணுகினார்.
அவர், அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய 39 ஆயிரம் ரூபாயுடன், லஞ்சமாக, 11 ஆயிரம் ரூபாய் கேட்டார். அந்த பணத்தை, சக்திவேல் கொடுத்தார்.
ஆனாலும் அஜீத் பிரகாஷ், மின் கம்பியை அகற்றாமல், மேலும், 2,000 ரூபாய் கேட்டு, சக்திவேலை அலைக்கழித்தார்.
இதனால் சக்திவேல், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, நேற்று மதியம், உதவி மின்பொறியாளர் அஜீத் பிரகாஷ் அலுவலகத்தில் இருந்தபோது, அவரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவி கொடுத்த, 2,000 ரூபாயை, சக்திவேல் கொடுத்தார்.
அதை, அஜீத் பிரகாஷ் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.