சோழவந்தான் : குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் உள்ள சேதமடைந்த உற்ஸவ சிலைகளை அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் செப்பனிடும் பணி நடந்தது.
இக்கோயிலில் கடந்த 2018ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த மாதமே உற்ஸவர்களான சித்திர ரத வல்லப பெருமாள், பஞ்சமூர்த்தி பெருமாளின் சேதமடைந்த பஞ்சலோக சிலைகள் திருடு போயி மீட்கப்பட்டன. இச்சிலைகளை வைத்தே குருவித்துறை கிராம மக்கள் விழா கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் சிலைகள் திருடு போனதால் வைகுண்ட ஏகாதசி திருவிழா 5 ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. விழா கமிட்டி மூலம் சிலையை சரிசெய்து கிராம மக்களின் வழிபாட்டிற்கு உத்தரவிட வழக்கு தொடுத்தனர்.
சிலையை சரிசெய்து ஆகம விதிப்படி பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு செய்து விழா கொண்டாட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று அறநிலையத்துறை துணை கமிஷனர் சுவாமிநாதன், மண்டல ஸ்தபதி ஜெயராம், எழுத்தர் ராஜேஷ் கண்ணா, சரக ஆய்வர் ஜெயலட்சுமி, அர்ச்சகர்கள் முன்னிலையில் சிலையின் சேதமான பகுதியை மாமல்லபுரம் பெருமாள் ஸ்தபதி கம்பெனி சார்பில் செப்பனிடும் பணி நடந்தது.
அர்ச்சகர்கள் கூறுகையில், இச்சிலையின் சேதமான பகுதிகளை செப்பனிடும் பணிகள் முடிந்த பிறகு ஆகம விதிப்படி திருமஞ்சனம், கும்பாபிஷேகம் செய்து, சிலைகளை பிரதிஷ்டை செய்யப்படும்.
பிறகு இந்தாண்டின் இறுதியில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் உற்ஸவர் சிலையை கிராம வழிபாட்டிற்கு எடுத்துச்சென்று திருவிழா நடத்தப்படும்'' என்றனர்.