மதுரை : மதுரையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் மாலை 5:30 மணி வரை காலியிடங்கள் விபரம் காண்பிக்கப்படாததால் நேற்று பங்கேற்க வந்த ஆசிரியர்கள் கடுப்படைந்தனர்.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் துவங்கியது. நேற்று (மே 25) பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கலந்தாய்வு இளங்கோ மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடந்தது. காலை முதல் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குவிந்தனர். மதியம் 1:00 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் எனக் கூறியதால் அதுவரை ஆசிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் மாலை 5:30 மணி வரை துவங்காததால் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது: 'எமிஸ்' குளறுபடியால் இந்தாண்டு துவக்கம் முதல் ஆன்லைன் கலந்தாய்வு குழப்பமாகவே நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு துவங்கும் என கூறி மாலை 5:30 மணிக்கு மேல் 'சர்வர்' பிரச்னையுடன் துவங்கியது. ஒருவர் ஒரு இடம் தேர்வு செய்ய அரை மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் ஒரு இடத்தை தேர்வு செய்யும் ஆசிரியரின் பணியில் இருந்த இடம் காலியிடப் பட்டியலில் காண்பிக்கப்படவில்லை. சீனியாரிட்டி விவரப் பட்டியலிலும் குளறுபடி ஏற்பட்டது.
சிலர் இடம் தேர்வு செய்த பின் அவர்களின் சீனியாரிட்டி விவரம் காண்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்த காலியிடங்கள் ஒரே நேரத்தில் காட்டப்படவில்லை. கலந்தாய்வு நடக்கும்போதே 'சிபாரிசு' அடிப்படையில் காலியிடங்கள் விலை போவதால் இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன. போதிய திட்டமிடல் இல்லை. ஆசிரியர்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர், என்றனர்.