உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அருகே, காவணிப்பாக்கம் காப்புக்காடு உள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான இக்காட்டில், மயில்கள், மைனா, புறா உள்ளிட்ட பல வகையான பறவைகளும், பல்வேறு வகையான விலங்குகளும் வசிக்கின்றன.
ஆண்டுதோறும் கோடை காலத்தில் இக்காட்டுப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. அச்சமயங்களில், காட்டில் உள்ள பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி விவசாய நிலங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தேடி அலைகின்றன.
அச்சமயங்களில், பறவைகளும், விலங்குகளும் வேட்டையாடப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இதனால், இக்காட்டுப் பகுதிக்குள் தண்ணீர் தொட்டி வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலரும் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், காவணிப்பாக்கம் காட்டுப் பகுதியையொட்டி உள்ள சாலை, கிரஷர் மற்றும் கல் குவாரியில் இருந்து செல்லும் லாரிகளால் குண்டும் குழியுமாக உள்ளது.
சிதிலமடைந்த இச்சாலையில் எப்போதும் மண் புழுதி பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
இச்சாலையில் மண் புழுதி பறப்பதை கட்டுப்படுத்த தினமும் காலை, மாலையில் தண்ணீர் லாரி மூலம் அச்சாலையில் தண்ணீர் ஊற்றப்படுகிறது.
அத்தண்ணீர் சாலையில் ஊற்றிய அடுத்த சில நிமிடங்களில் வறண்டு போகிறது. இதனால், லாரி மூலம் தண்ணீர் ஊற்றுவதை காட்டில் உள்ள பறவைகள் எதிர்பார்த்திருந்து, அச்சமயம் சாலையின் பள்ளங்களில் தேங்கும் சேற்று தண்ணீரை பருகி தினமும் தாகம் தீர்த்துக் கொள்கின்றன.
எனவே, காவணிப்பாக்கம் காப்புக்காட்டுப் பகுதியில், குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்தி, தினமும் அத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.