பாரதி கண்ட புதுமை பெண்களை உணர்த்தும் வகையில், தழல் வீரம் நாடகம் அரங்கை நிறைத்து கைத்தட்டலை பெற்றது.
சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று மாலை, பாரதியார் கூற்றின் சிறப்பு அம்சமாக, 'தழல் வீரம்' நாடகம் அரங்கேறியது.
பாரதி கண்ட புதுமை பெண்கள் கருத்தை மையப்படுத்தி, இந்நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் பிரச்னை ஏற்படும்போது, அதை எதிர்கொண்டு புரட்சி போராளி பெண்ணாக மாறி வெற்றிபெற வேண்டும் என்ற கருத்தை, நாடகத்தில் வெளிப்படுத்தினர்.
இளம் வழக்கறிஞரான ஐஸ்வர்யாவுக்கு, தன் காதல் கணவரால் பிரச்னை ஏற்படுகிறது; இருவரும் பிரிகின்றனர். கணவர், ஒரு பிரச்னையில் சிக்கி சிறைக்கு போகிறார். அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டு, கணவரை மீட்டு அவருக்கு பாடம் கற்பிக்கும்போது, ஐஸ்வர்யா நடிப்புக்கு, அரங்கில் இருந்தோர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
சமையல்காரர் கோபால், வழக்கறிஞர் கோகுல்நாத், ஐஸ்வர்யாவின் கணவர் மாதவன் உட்பட மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும், ரசிக்கும்படி இருந்தது.
ஸ்ருதி, ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, இயக்கியிருந்தார். ராதாகிருஷ்ணன் எழுதியிருந்தார்.
கலை இளமணி விருது பெற்ற ஸ்ருதியின் தாத்தா, நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர் ஆவார்.
- நமது நிருபர் -