சித்தாமூர்: சித்தாமூர் அருகே, பூங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பூரியம்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் செயல்படும் தனியார் பால் நிறுவனம், அரசுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும், எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டி, பூரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க கோரி நேற்று முன்தினம் சித்தாமூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததன்படி, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்நிலையில், நேற்று, செய்யூர் வட்டாட்சியர் பெருமாள் ஆக்கிரமிப்பு நிலத்தை நேரில் ஆய்வு செய்தார்,
பின், இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏற்கனவே தனியார் நிர்வாகத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
தனியார் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், வருவாய்த் துறை வாயிலாக விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.