திருப்பூர்:பணவீக்கம் குறைந்து, நுகர்வு சீராகி வருவதால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சந்தையில், இறக்குமதி, அக்., மாதம் இயுல்புநிலைக்கு வருமென, ஏற்றுமதி வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட பண வீக்கத்தால், உள்நாட்டு வியாபாரம் குறைந்ததுடன், இந்திய ஆயத்தஆடை ஏற்றுமதி வர்த்தகத்தையும் பாதித்தது. கடந்த நிதியாண்டில், 1.29 லட்சம் கோடி ரூபாய்க்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது; அதிலும், 8.7 சதவீதம் வளர்ச்சி பெற்றது.
அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் விற்பனை விலை ஏற்றத்தை ஒப்பிட்டால், ஆடைகள் எண்ணிக்கை அடிப்படையில், 10 முதல், 15 சதவீதம் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது.
உதரணமாக, கடந்த, 2021--22ம் நிதியாண்டில், இந்தியா, 94.6 கோடி 'டி-சர்ட்'கள் ஏற்றுமதி செய்திருந்தது; கடந்த நிதியண்டில், (2022-23) 89 கோடி எண்ணிக்கை 'டி-சர்ட்' மட்டும் ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.
இறக்குமதி நாடுகளில் நிலவும் சூழலால், ஆயத்த ஆடை உற்பத்தி குறைந்து காணப்பட்டது. ஆனால், இரண்டாவது காலாண்டில், இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, ஐ.டி.எப்., அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
கடந்த நிதியாண்டின் துவக்கத்தில், தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு வணிகர்கள் ஆடைகளை இறக்குமதி செய்தனர். உதாரணமாக, மாதம், ஏழு பில்லியன் டாலர் (57 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) இறக்குமதி செய்யும் அமெரிக்க சந்தை, ஆக., மாதம் மட்டும், 10.4 பில்லியன் டாலர் (86 ஆயிரத்து, 920 கோடி ரூபாய்) மதிப்பில் ஆடைகளை இறக்குமதி செய்தது.
அதன்பின், பணவீக்கத்தால் ஏற்பட்ட மந்தநிலையால், நுகர்வு குறைந்தது; அத்துடன், இறக்குமதியும் குறைய துவங்கியது.
கடந்த பிப்., மாதம், 5.9 பில்லியன் டாலர் (48 ஆயிரத்து 380 கோடி ரூபாய்) அளவுக்கு மட்டுமே ஆடை இறக்குமதி செய்தனர்.
இங்கிலாந்து சந்தையில், 2022 அக்., மாதம், 2.23 பில்லியன் டாலராக (18 ஆயிரத்து, 286 கோடி ரூபாய்) இருந்த ஆயத்த ஆடை இறக்குமதி, 2023 பிப்., மாதம், 1.3 பில்லியன் டாலராக (10 ஆயிரத்து, 660 கோடி ரூபாய்) குறைந்தது.
நான்கு மாதங்கள் வரை இறக்குமதி குறைந்ததாலும், அந்த சந்தைகளில், சில்லரை விற்பனை நிலையாக நடப்பதாலும், தற்போது, ஆடை கையிருப்பு குறைய துவங்கியுள்ளது. ஆடை கையிருப்பு குறைந்து, புதிய ஆர்டர் வரத்து துவங்கியுள்ளது.
பணவீக்கத்தின் தாக்கம் குறைந்து, நுகர்வு சீராகுமென அந்த நாட்டு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் , ஏப்., மாதத்தில் இருந்து, அந்நாடுகளின் இறக்குமதி அதிகரித்துள்ளது. வரும் அக்., மாதம், இயுல்புநிலை திரும்ப வாய்ப்புள்ளது.
சர்வதேச நாடுகள், உற்பத்தி கட்டமைப்பை விரிவுபடுத்தி இருப்பதால், போட்டி நாடுகளிடையே, கடும் போட்டி நிலவும். எனவே, போட்டித்திறன் வளர்ப்பில் கவனம் செலுத்தினால், வர்த்தக வாய்ப்புகள் வசமாகும் போது, நம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.