திருப்பூர்:''ரவுடியிசமும், தி.மு. க.,வும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்'' என்று, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
திருப்பூரில் அ.தி.மு.க.,புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
செந்தில் பாலாஜி, வீட்டில் வருமான வரி துறையினர் 'ரெய்டு' நடத்திய பின், ஆயிரம் அரசு மதுபான பார்களுக்கு, மாதம் மாதம் செலுத்த வேண்டிய தொகையை முறையாக செலுத்த வேண்டுமென கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், 500 முதல் ஆயிரம் பார்களுக்கு மட்டும் பணம் செலுத்தி விட்டு, மற்றவற்றுக்கு பணம் செலுத்தாமல் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுவரை பைக்கில் சென்று செயின் பறித்து வந்தனர். தற்போது காரில் சென்று செயின் பறிக்கப்படுகிறது. இது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பொள்ளாச்சியில் தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜவுளி தொழில், கரூரில் ஜமுக்காளம் தொழில், ஈரோட்டில் டெக்ஸ்டைல் தொழில் பாதிப்பு, இதற்கு தீர்வுகாணாமல் முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார். இது உல்லாச பயணமாகதான் இருக்குமே தவிர, அது தொழிலை மேம்படுத்துவதாக இருக்காது.
ரவுடியிசமும் தி.மு.க.,வும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதனை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. போலீசுக்கு தெரியாமல் எந்த சம்பவமும் நடப்பதில்லை. இது, ஆட்சி முடிவு கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதை காட்டுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.