குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 63 வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் நிறைவாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் 63வது பழ கண்காட்சி நேற்று துவங்கியது.
சிம்ஸ் பூங்கா நுழைவாயிலில் பலா உள்ளிட்ட பழங்களாலான அலங்கார வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 1.5 டன் அன்னாசி பழங்களால் ஜெயின்ட் பைன் எனும் பிரம்மாண்ட அன்னாசி வடிவமைப்பு, ஆரஞ்சு பழங்களால் பிரமிட், திராட்சை பழங்களால் மலபார் ஜெயின்ட் ஸ்குரில், மாம்பழம் உட்பட பல வகை பழங்களில் மஞ்சள் பை, மாதுளம் பழத்தால் மண்புழு உள்ளிட்ட வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளதுடன், 3600 வகையான தாவரங்கள் உள்ளன. நீலகிரி சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்து வருகிறது, என்றார்.
ஆஸ்கார் விருது பெற்ற எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட நாயகர்கள் முதுமலை பாகன்கள் பொம்மன், பெள்ளி ஆகியோர் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் நீலகிரி எம்பி ராஜா, மாவட்ட கலெக்டர் அமரித் உட்பட பலர் பேசினர்.
குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ பேண்ட் வாத்தியம், பரத நாட்டியம், சிலம்பாட்டம் காட்டுநாயக்கர் பழங்குடியினரின் பாரம்பரிய இசை உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குளு குளு காலநிலை நிலவுவதால் குன்னுாரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழ கண்காட்சியை ரசித்தனர்.