அன்னூர்:நள்ளிரவில் ஓட்டலுக்கு சென்ற கோவில் ஸ்தபதியை, திருடன் என நினைத்து அடித்துக் கொன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அருகே மாதம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல், 42; கோவில் ஸ்தபதி. அன்னூர் அருகே பச்சாபாளையத்தில் உள்ள, ஒரு கோவிலில் தங்கி சிற்ப வேலை செய்து வந்தார்.
காளப்பட்டியில், குரும்பபாளையம் சாலையில் டெலிஷியஸ் ரெஸ்டாரன்ட் என்னும் தாபா ஓட்டல் உள்ளது. கடந்த 25ம் தேதி நள்ளிரவு வடிவேல் அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அங்கே ஓட்டல் தொழிலாளிகள் மாரிமுத்து, 57. ராஜ்குமார், 21 ஆகிய இருவரும், அவரது நண்பர்களான வழியாம் பாளையத்தை சேர்ந்த டெம்போ டிரைவர்கள் மால் துரை, 45. சந்தோஷ் குமார், 24. ஆகியோரும், மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.
அங்கு வந்த வடிவேலை, திருட வந்திருப்பதாக நினைத்து, கட்டி வைத்து தடியால் சரமாரியாக அடித்துள்ளனர். மயங்கிய வடிவேலை, ஓட்டலின் பின்புறம் போட்டு விட்டு, தூங்கச் சென்று விட்டனர். 26ம் தேதி காலையில் பார்த்தபோது, வடிவேல் இறந்து கிடந்தார்.
சற்று தொலைவில் உள்ள காட்டுக்குள், உடலை வீசிச்சென்று விட்டனர். கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
'சிசி டிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை செய்ததில், கொலை செய்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.