திருப்பூர்:''அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், தற்போது, 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, பிப்., முதல் வெள்ளோட்டம் நடந்து வருகிறது. தற்போது வரை ஆறு நீரேற்ற நிலையங்கள் மற்றும் பிரதான குழாய்களில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நீரேற்ற நிலையங்களின் இடையில் உள்ள கிளைக்குழாய்கள் மற்றும், 1,045 குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள நீரை வெளியேற்ற பொருத்தப்பட்டுள்ள, 'அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனப்படும் உபகரணங்களின் செயல்பாடுகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அனைத்து சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்தாண்டு டிச., மாதமே அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டம் பயன்பாட்டுக்கு வருவது, தள்ளிக்கொண்டே போவது விவசாயிகள் மற்றும் போராட்டக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறையாவது, அறிவித்தபடி திட்டத்தை துவக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.