திருப்பூர்:திருப்பூரில், உள்நாட்டு பனியன் நிறுவன உரிமையாளர்களிடம், 9.30 கோடி ரூபாய்க்கு ஆடைகளை பெற்று மோசடி செய்த வர்த்தக நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம் ரோட்டைச் சேர்ந்த பழனிசாமி உட்பட, 20க்கும் மேற்பட்டோர் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் எங்களிடம், சென்னை, தி.நகரில் உள்ள, 'மங்கல்தீப் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர், பனியன் துணிகளை சில ஆண்டுகளாக வாங்கி வந்தனர்.
ஆரம்பத்தில் வாங்கிய போது, பணம் கொடுத்து வந்தனர். நாளடைவில், பணத்தை சரியாக கொடுக்காமல் காலம் கடத்தினர். இதுபோன்று, திருப்பூரைச் சேர்ந்த பல உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களிடம் வியாபாரம் மேற்கொண்டனர்.
எங்களிடம் வாங்கிய பனியன் துணிகளுக்கு காசோலை வழங்கினர். அதை வங்கியில் செலுத்தினால், 'ரிடர்ன்' ஆகிறது. இதுகுறித்து கேட்டால், உரிய பதில் அளிப்பதில்லை. இவ்வாறாக, 49 பேருக்கு, 9 கோடியே, 30 லட்சம் ரூபாயை தராமல் மோசடி செய்துள்ளனர். எங்களை ஏமாற்றியவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.