வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறையில் கோடைவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கோடை விழாவில், தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி, வனத்துறை சார்பில் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, தேயிலைவாரியம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து, கண்காட்சி நடக்கிறது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று காலை, 11:00 மணிக்கு செல்லபிராணிகள் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் வெங்கடாசலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். அழகான வளர்ப்பு நாய்கள், உத்தரவுக்கு பணிந்து விளையாடின.
கோடை விழாவை காண வந்த சுற்றுலா பயணியரை கவரும் வகையில், படகுசவாரி நேற்று துவங்கப்பட்டது. ஏற்கனவே, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த படகு இல்லம் நேற்று திறக்கப்பட்டு, மக்கள் படகு சவாரி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
காலில் மிதித்து இயக்கும் பெடல் படகில் பயணித்து, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர். படகு சவாரிக்கு கட்டணம் இன்றி, இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.
விழாவில், இன்று 28ம் தேதி மாலை, 3:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் நிறைவு விழாவில், அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.