விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பூரி குடிசையில் 'கள்' இறக்க அனுமதி வழங்கக் கோரியும், பொய் வழக்கு போடும் போலீசை கண்டித்தும் பனையேறி குடும்பத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
விக்கிரவாண்டி அடுத்த வேம்பி, மதுரா பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் பாண்டியன் தலைமையில் நேற்று காலை 11.00 மணியளவில் 'கள்' இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க வேண்டும்.
பனையேறிகள் மீது கள்ளச்சாராய வழக்கு போடுவதையும், பெண்களை இழிவாக பேசும் கஞ்சனுார் இன்ஸ்பெக்டரை கண்டித்தும் பனையேறிகள் குடும்பத்தினர் திடீர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினர்.
விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், டி.எஸ்.பி., கவினா, இன்ஸ்பெக்டர் சேகர், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், வி.ஏ.ஓ., வாசு ஆகியோர் மாலை 4:00 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.